தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் கட்சியுடன் ஐபேக் ஒப்பந்தம்
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் கட்சி பிரசாந்த் கிஷோர் முன்பு தலைமையேற்று நடத்திய ஐபேக் அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது.;
ஐதராபாத்,
தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறது.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தேசிய கட்சியான காங்கிரஸ் அதற்கான பணிகளை தற்போது இருந்தே திட்டமிட துவங்கி விட்டது. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதில், கட்சியில் மாற்றங்கள் கொண்டு வருவது, வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அவர் சோனியாவிடம் அளித்துள்ளார்.
சோனியாவுடன் கடந்த 20ந்தேதி முதல் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவரித்ததோடு, 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டி காட்டினார்.
தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவர தயார் என்றும் அவர் கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகின. அவரது பரிந்துரைகள் உண்மையில் காங்கிரசிற்கு பயன் அளிக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை சோனியா நியமித்துள்ளார்.
அந்த குழு பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் குறித்த விரிவான அறிக்கையை சோனியாவிடம் சமர்ப்பித்துள்ளது. தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் விலகி, காங்கிரசிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியானது.
கிஷோர் முறையாக கட்சியில் இணைந்தால், காங்கிரசுக்கு பலன் கிடைக்கும் என்றும் சில மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
எனினும் இது ஒருபுறம் இருக்க, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். இதற்காக நேற்று காலை முதல் அவரது இல்லத்தில் முகாமிட்டுள்ள கிஷோர், நேற்றிரவு அங்கேயே தங்கினார். இதனால், இருவருக்கு இடையேயான ஆலோசனை இன்றும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
காங்கிரசுடன் கூட்டு சேர ஒருபுறம் தயாராக இருக்கும் கிஷோர், தெலுங்கானாவில் ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, பிரசாந்த் கிஷோர் முன்பு தலைமையேற்று நடத்திய ஐபேக் அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால், காங்கிரசுடன் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஐபேக்கின் தலைவராக பல ஆண்டுகள் இருந்து வந்த கிஷோர் அந்த அமைப்புடனான தனது தொடர்பை அதிகாரப்பூர்வ முறையில் நிறுத்தி கொண்டார்.
என்றாலும் கூட அந்த அமைப்பின் அனைத்து முடிவுகளையும் எடுப்பதில் கிஷோரின் ரகசிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபேக் உடன் சந்திரசேகர ராவ் கட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
கிஷோருடன் ரூ.300 கோடி ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டை சந்திரசேகர ராவ் மறுத்துள்ளார். அவர் ஐதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக எனது சிறந்த நண்பர் கிஷோர் என கூறியுள்ள சந்திரசேகர ராவ், பணத்திற்காக அவர் ஒருபோதும் வேலை செய்வது கிடையாது.
அவர் ஊதியம் பெற்று கொண்டு வேலை செய்யும் பணியாளர் அல்ல. நாட்டுக்காக தன்னை அவர் அர்ப்பணித்து கொண்டுள்ளது பற்றி உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
தேசிய அளவிலான மாற்றம் கொண்டு வருவது பற்றி கிஷோரிடம் நான் பேசி வருகிறேன். அதற்காக கிஷோர் என்னுடன் பணியாற்றி வருகிறார். இதில் யாருக்கு என்ன பிரச்சனை? அவரை ஒரு வெடிகுண்டாக ஏன் அவர்கள் பார்க்க வேண்டும்? அவர்கள் ஏன் அழுகிறார்கள்? என்றும் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.