முதல்-மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பசவராஜ் பொம்மை 29-ந் தேதி டெல்லி பயணம்
முதல்-மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிற 29-ந் தேதி பசவராஜ் பொம்மை டெல்லி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை மாற்றியமைப்பது குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கர்நாடக மந்திரிசபையில் 5 இடங்கள் காலியாக உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால், மந்திரிசபை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரேணுகாச்சார்யா, யத்னால் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.
அனுமதி வழங்கவில்லை
குறிப்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். அப்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய பசவராஜ் பொம்மைக்கு ஜே.பி.நட்டா அனுமதி வழங்கவில்லை. மேலும் கடந்த வாரம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடந்த பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்று ஜே.பி.நட்டா கூறி இருந்தார். அப்போதும் ஜே.பி.நட்டாவை சந்தித்து பசவராஜ் பொம்மை பேசினார்.
அப்போது இம்மாத இறுதியில் டெல்லி வரும்படியும், அங்கு வைத்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசி முடிவு எடுக்கலாம் என்றும் பசவராஜ் பொம்மையிடம் ஜே.பி.நட்டா கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போனபடி இருப்பதால் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்த எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
29-ந் தேதி டெல்லி பயணம்
இந்த நிலையில், டெல்லியில் வருகிற 30-ந் தேதி முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து, வருகிற 29-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து பசவராஜ் பொம்மை பேச உள்ளார்.
குறிப்பாக மந்திரிசபை விரிவாக்கம் செய்வதா? அல்லது மந்திரிசபையை மாற்றியமைப்பதா? என்பது குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மந்திரிசபை மாற்றியமைப்பு
இதன் காரணமாக மாநிலத்தில் பா.ஜனதாவை பலப்படுத்தவும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் மந்திரிசபையை மாற்றியமைக்க மேலிடமும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகள் 5 முதல் 8 பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பா.ஜனதா மேலிடம் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 5 இடங்கள் காலியாக இருப்பதால், 10-க்கும் மேற்பட்ட புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.