பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த ஆசிரியர்கள்..!

உத்தரப்பிரதேசத்தில் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி 2 ஆசிரியர்கள் மாணவிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

Update: 2022-04-23 10:35 GMT
கோப்புப் படம் PTI
லக்கிம்பூர் கேரி,  

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் பெஹ்ஜாமில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாவில் 2 ஆசிரியர்கள், சுமார் 24 மாணவிகளை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து, பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கட்டியார் என்ற 2 ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் மற்றொரு பள்ளிக்கு ஒழுக்கத்தின் அடிப்படையில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியர்கள் இருவரும் அந்த பணியிடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விடுதி காப்பாளர் லலித்குமாரி, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் பெண் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளும் உள்ளூர் போலீசாரும் பல மணி நேரத்திற்கு பிறகு சிறுமிகளை தங்களுடைய விடுதிக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து அந்த 2 ஆசிரியர்கள் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்