நிதி ஆயோக் துணை தலைவர் பதவியில் இருந்து ராஜீவ் குமார் விலகல்! புதிய தலைவராக டாக்டர் சுமன் கே பெரி நியமனம்
இவருடைய ராஜினாமாவை தொடர்ந்து பொருளாதார நிபுணரான டாக்டர் சுமன் கே பெரி பொறுப்பேற்க உள்ளார்.
புதுடெல்லி,
நிதி ஆயோக் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜீவ் குமார் விலகினார், புதிய தலைவராக சுமன் பெரி பொறுப்பேற்க உள்ளார்.
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, டாக்டர் சுமன் கே பெரி நிதி ஆயோக் துணைத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த பொருளாதார நிபுணரான ராஜீவ் குமார், ஆகஸ்ட் 2017ல் நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஏப்ரல் 30ஆம் தேதி பதவி விலகுகிறார்.
2014ம் ஆண்டு அறிவுசார் நிபுணர்கள் குழுவாக நிதி ஆயோக் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. முதல் முறையாக அதன் துணைத் தலைவர் பதவியில் இருந்து 2017ல் அரவிந்த் பனகாரியா விலகியதை தொடர்ந்து ராஜீவ் குமார் பொறுப்பேற்றார்.
ஆகஸ்ட் 2019 இல், நிதித் துறையில் மோசமான பணப்புழக்க நிலைமை மற்றும் பொருளாதாரத்தில் பலவீனமான தனியார் முதலீடு ஆகியவற்றை அறிந்து, தனியார் துறை நிறுவனங்களின் மீதான அவநம்பிக்கையை நீக்கி முதலீடுகளை உயர்த்த அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதை அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
இப்போது இவருடைய ராஜினாமாவை தொடர்ந்து பொருளாதார நிபுணரான சுமன் பெரி பொறுப்பேற்க உள்ளார். அவர் மே 1-ம் தேதி முதல் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று நேற்று வெளியிடப்பட்ட அரசாணை தெரிவித்துள்ளது.
சிறந்த பொருளாதார நிபுணரான சுமன் பெரி, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் பொது இயக்குநர் பொறுப்பு வகித்தவர் ஆவார். அவர் 2001 முதல் 2011 வரை பத்தாண்டுகள் பதவி வகித்தார்.
அதற்கு முன்னதாக அவர் வாஷிங்டனில் உலக வங்கியில் இருந்தார். அங்கு லத்தீன் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மேக்ரோ பொருளாதாரம், நிதிச் சந்தைகள் மற்றும் பொதுக் கடன் மேலாண்மை ஆகிய துறைகளில் பணியாற்றினார்.
மேலும், அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அங்கமான, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். தேசிய புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலைப் படிப்பை மேற்கொண்டார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொது விவகாரங்களில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
2010ல், மன்மோகன் சிங்கின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பெரி உறுப்பினராக இருந்தபோது, அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையை கடுமையாக்க வேண்டும் என்று அவர் பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.