நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவி படுகொலை... போலீசில் சலவை தொழிலாளி சரண்
பெங்களூரு அருகே ஆனேக்கல்லில் நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கொலை செய்த சலவை தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் டவுன் திம்மராயசாமி கோவில் சாலையை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 35). சலவை தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மல்லேசை அவரது மனைவி பிரிந்து விவாகரத்து பெற்றார். பின்னர் சரஸ்வதி (33) என்பவரை மல்லேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரஸ்வதிக்கும், தனது சகோதரருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக மல்லேஷ் சந்தேகித்தார். இதுதொடர்பாக சரஸ்வதி, மல்லேஷ் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நடந்த பிரச்சினையின் போது சரஸ்வதியின் கழுத்தை நெரித்து மல்லேஷ் கொலை செய்தார்.
இந்த விவகாரம் போலீசாருக்கு தெரிவதற்கு முன்னதாக அவரே ஆனேக்கல் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இருப்பினும் போலீசார் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்று கோர்ட்டீல் ஆஜர்படுத்தினர். அப்போது திடீரென்று வக்கீல் மற்றும் போலீசார் முன்பு கூச்சலிட்டு அழுதார். மேலும் போலீசார் தன்னை போலி எண்கவுண்டர் செய்ய முயற்சிக்கின்றனர். வக்கீல்களும் இதற்கு உடந்தையாக செயல்படுகிறார்கள். எனவே யாராவது என்னை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இதை பார்த்த போலீசார் அவரை வலுகட்டாயமாக இழுத்து சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது மல்லேஸ் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மல்லேஸ் பேசிய வீடியோ ஒன்றை குறிப்பிட்டிருந்தனர். அதில் அரசியல் பிரமுகர்கள் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்களுக்கு மல்லேஷ் குறித்து எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். பின்னர் சில நாட்கள் கழித்து என்னை யாரும் கொலை செய்ய முயற்சிக்கவில்லை.
நான் பொய்யான தகவலை பதிவிட்டேன் என்று அவரே வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இவ்வாறு பல முறை முரண்பாடான தகவல் கூறி, போலீசாரின் கவனத்தை திசை திருப்பியதாக கூறப்பட்டனர். இதை ஏற்ற நீதிபதி உடனே அவரை மருத்துவ பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டதுடன், நீதிமன்ற காவலில் வைக்கும்படி கூறினார்.