கர்நாடகத்தில் இன்று பி.யூ.சி. பொதுத்தேர்வு: முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து தேர்வு எழுத தடை

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதையொட்டி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-04-22 03:20 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 936 பேர் மாணவர்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 319 மாணவிகளும் அடங்குவர். 

தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும்போது மாணவர்கள் அந்தந்த கல்லூரி வளர்ச்சி குழுக்களால் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு சீருடை விதிமுறைகள் பொருந்தாது என்று அரசு கூறியுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த சிக்கலும் இன்றி தேர்வை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சில பதற்றமான தேர்வு மையங்களில் அதிக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை காண்பிடித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு தினமும் காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை நடைபெறும்.

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதனால் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வருகிற மே மாதம் 18-ந் தேதி இந்த தேர்வு நிறைவடைகிறது. கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் கடந்த 2021-ம் ஆண்டு பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஓராண்டுக்கு பிறகு பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

தேர்வு மையங்களில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தோ்வு மைய தலைமை மேற்பார்வைாளர் கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க 3,074 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை சுற்றிலும் உள்ள ஜெராக்ஸ் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

கேள்வித்தாள் கசியாமல் இருக்க அனைத்து மாவட்ட கருவூலங்களிலும் பலத்த போலீஸ: பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் ஒரு மேசையில் 2 மாணவர்கள் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்வு எண் அந்த மேசையில் எழுதப்பட்டுள்ளன. இன்று காலையில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்ததும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண் எழுதப்பட்டுள்ள இடத்தில் அமர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை கேட்டு கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்