டெல்லி: ஜஹாங்கீர்புரி பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்...!

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டது.

Update: 2022-04-21 15:46 GMT
புதுடெல்லி,

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது. 

இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறியது.இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பையும் கலைந்து போக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டது. அத்துடன் போலீசாரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் கலவரக்காரர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார்.

இந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் 8 போலீசார் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அத்துடன் ஏராளமான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

அத்துடன் சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க போலீசார் கொடி அணிவகுப்பு, ரோந்து என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிரோன் கேமரா மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வன்முறை சம்பவம் நடந்த ஜஹாங்கீர்புரி பகுதியில் டெல்லி போலீசார் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தற்காலிக கண்காணிப்பு நிலையங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்