பிரசவ வேதனையில் துடித்த கர்ப்பிணி பெண்ணை ஒரு கையில் துப்பாக்கியுடன் 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற வீரர்கள்!
ஒரு கர்ப்பிணி பெண்ணை கட்டிலுடன் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு போய் பாதுகாப்பு படை வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராய்பூர்,
இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள காடுகள் அதிகம் நிறைந்த மாநிலம் சத்தீஸ்கர் ஆகும். அங்கு காலங்காலமாக நக்சல் பயங்கரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். அவர்களை ஒடுக்க போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் பிராந்தியத்தின் தண்டேவாடா மாவட்டத்தில், பிரசவ வேதனையில் துடித்த ஒரு கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு போய் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது.
பாதுகாப்புப் பணியாளர்கள் இரட்சகர்களாக மாறி, ஒரு தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் உள்ள சாலைகள் நக்சல்களால் சேதமடைந்ததால், ஆம்புலன்ஸ்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று, பர்கம் பகுதிக்கு அருகே மாவட்ட ரிசர்வ் காவலர் படை வீரர்கள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் பிரசவ வேதனையில் துடித்த ஒரு கர்ப்பிணி பெண்ணை, குடும்ப உறுப்பினர்கள் சிரமத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதை கண்டனர்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழலில் அந்த கர்ப்பிணிப் பெண் இருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.
உடனே, அவர்கள் விரைவாக செயலில் இறங்கி, கட்டிலை ஸ்ட்ரெச்சராக மாற்றி, அந்த பெண்ணை கட்டிலுடன் தங்கள் தோளில் சுமந்தனர். அந்தப் பெண்ணை தோளில் சுமந்துகொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து தங்கள் ரோந்து வாகனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பெண்ணை, பால்னார் சுகாதார மையத்திற்கு காரில் அழைத்து சென்றனர்.
அங்கு அந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த நாற்பது ஆண்டுகளாக, தடை செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோத நக்சல் அமைப்புகள், சாலைகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு கிடைக்காமல் பறிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த மோசமான முயற்சிகளை முறியடிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பஸ்தார் ரேஞ்ச் போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் பி கூறினார்.