பிரதமர் மோடி, டாக்டர் அம்பேத்காரை இளையராஜா சரியாகவே ஒப்பிட்டு உள்ளார்; தமிழிசை சவுந்தரராஜன்
பிரதமர் மோடி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை இளையராஜா சரியாகவே ஒப்பிட்டு உள்ளார் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;
புதுச்சேரி,
பிரதமர் மோடியின் ஆட்சியை கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று புத்தக முன்னுரை ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். பிரதமர் மோடி, அம்பேத்கர் ஒப்பீடு குறித்த இளைராஜாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இதுபற்றி தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்க சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே !!!! என்று பதிவிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அளித்துள்ள பேட்டி ஒன்றில், பிரதமர் மோடி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிறைய விசயங்களை செய்துள்ளார். டாக்டர் பி.ஆர். அம்பேத்காருக்காக நினைவகம் ஒன்றை கட்டியுள்ளார். அவர் இயற்றிய அரசியலமைப்பை புனித நூல் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதனால், பிரதமர் மோடி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை இசையமைப்பாளர் இளையராஜா சரியாகவே ஒப்பிட்டு உள்ளார் என்று கூறியுள்ளார்.
தமிழ் புது வருட பிறப்பினையொட்டி, தமிழகத்தில் நடந்த கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன. இதேபோன்று, புதுச்சேரியிலும் கவர்னரின் தேநீர் விருந்தில் இரு கட்சிகளும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், அதனை குறிப்பிடும் வகையில் பேசிய தமிழிசை கூறும்போது, கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேற்றுமைகள் மற்றும் முரண்பாடுகளை கடந்து நல்லுறவு இருக்க வேண்டும். அரசுக்கு எதிரானவர் என்ற அடிப்படையில் கவர்னரை பார்க்க கூடாது. என்னுடைய வேண்டுகோள் இதுபற்றி அமர்ந்து இருவரும் பேச வேண்டும் என்பதே என்று கூறியுள்ளார்.