முககவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியது அரியானா அரசு..!!
டெல்லியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் முககவசம் அணிவதை மீண்டும் அரியானா அரசு கட்டாயமாக்கி உள்ளது.
சண்டிகர்,
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவதை அரியானா அரசு இன்று கட்டாயமாக்கி உள்ளது. குருகிராமில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பரிதாபாத், சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
மேலும் அரியானா மாநிலத்தில் இன்று பதிவான 234 கொரோனா பாதிப்புகளில், குருகிராமில் மட்டும் 198 பேருக்கும், பரிதாபாத்தைச் சேர்ந்த 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குருகிராமில் கொரோனா பாதிப்புகள் ஏன் அதிகரித்து வருகின்றன என்பதை ஆய்வு செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) ராஜீவ் அரோரா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ள்தாகவும் அனில் விஜ் கூறினார். இன்னும் அதன் அறிக்கை வரவில்லை என்று கூறிய அவர், தேசிய தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாங்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.