தனியார் மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை; அரசு மருத்துவர்களுக்கு முதல்-மந்திரி எச்சரிக்கை!

சத்தீஸ்கரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஜெனரிக் மருந்துகளுக்கு பதிலாக பிராண்டட் மருந்துகளை பரிந்துரைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Update: 2022-04-18 15:23 GMT
ராய்ப்பூர்,

மருத்துவமனைகளில் பெரும்பாலும்  குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மருந்துகளையே, அதாவது பிராண்டட் மருந்துகளை தான் டாக்டர்கள் பரிந்துரை சீட்டில் எழுதிக் கொடுப்பார்கள். 

இந்த நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஜெனரிக் மருந்துகளுக்கு பதிலாக பிராண்டட் மருந்துகளை பரிந்துரைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் எச்சரித்துள்ளார்.

முதல் மந்திரி பூபேஷ் பாகேல், இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, மாநில அரசின் ‘ஸ்ரீ தன்வந்திரி ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர்’ திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார். அப்போது பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் முத்திரை குத்தப்பட்ட  ‘பிராண்டட்’ மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சமூகத்தின் ஏழைப் பிரிவினருக்கு உதவும் வகையில், பொது மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்காக, மாநில அரசால், கடந்த அக்டோபரில் ‘ஸ்ரீ தன்வந்திரி ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர்’ தொடங்கப்பட்டது.  

இந்த திட்டத்தின் கீழ், மொத்த கொள்முதல் விலையில் (எம்ஆர்பி) 50 சதவீதம் முதல் 71 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கும் வகையில் 159 மெடிக்கல் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

முதல் மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து, அதனை கடுமையாக கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமை மருத்துவம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு, சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்