மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாதது - மந்திரி நிதின் ராவத்
மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்று மந்திரி நிதின் ராவத் சொல்கிறார்.;
மும்பை,
மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்றும், விவசாயத்துக்கு தடையின்றி வினியோகம் செய்யப்படுவதாகவும் மின்சாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.
மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மராட்டியத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் நிலவிவரும் வேளையில் மின்உற்பத்தி பாதிப்பு மராட்டியத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டுள்ளது.
இதையடுத்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு மின்வெட்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் கூறியதாவது:-
மராட்டியத்தில் சுமார் 4 ஆயிரத்து 700 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் போதிய எரிவாயு விநியோகம் இல்லாததால் மின்வெட்டை தவிர்க்க முடியாததாகி விட்டது.
எனினும் விவசாய தேவைக்காக பகலில் 8 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஒருநாளைக்கு 760 மெகாவாட் மின்சாரமும், என்.டி.பி.சி. நிறுவனத்தில் இருந்து ஒரு நாளைக்கு 673 மெகாவாட் மின்சாரமும் வாங்க ஜூன் 15-ந் தேதிவரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் மராட்டிய மின் வினியோக நிறுவனமான மகாவிதரன், மின் பரிமாற்ற நிறுவனத்திடம் இருந்து 1500 முதல் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குகிறது.
கொய்னா நீர்மின் நிலையம் முழு திறனுடன் இயங்கி வருகிறது. தற்போது அங்கு கூடுதலாக 10 டி.எம்.சி. தண்ணீரை உற்பத்திக்கு பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.