மின் மயானங்கள் அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் - மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
மின் மயானங்கள் அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், மரக்கட்டைகளை கொண்டு செயல்படும் எரியூட்டு மயானத்தால் ஏற்படும் காற்று மாசுவை தடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.
இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 12-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், 'காற்று மாசுவை தடுக்கும் வகையில், மின்சாரம், கியாஸ் மூலம் இயங்கும் மயானங்களை அமைக்கும் சாத்தியக்கூறுகளை மாநில அரசுகள் ஆராய வேண்டும். மத நம்பிக்கையின் அடிப்படையில் ஓர் உடலை தகனம் செய்ய 350 முதல் 450 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு தகனம் செய்வதை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் மின்சாரம், கியாஸ் மூலம் இயங்கும் மயானங்களை அமைக்கும் சாத்தியக்கூறுகளை மாநில அரசுகள் ஆராய வேண்டும். அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவில் எந்த ஒரு மத உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.