காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகம்; திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்!

அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பாஜக அரசுடன் முக்கியமாக முதல் மந்திரியுடன் ரகசிய புரிந்துணர்வு பேணி வருகின்றனர்.

Update: 2022-04-17 16:15 GMT
புதுடெல்லி,

அசாம் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவர் ரிபுன் போரா,கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி முன்னிலையில், ரிபுன் போரா திரிணாமுல் காங்கிரசில்  இன்று இணைந்தார். 

பாஜகவுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, அசாம் காங்கிரசின் மூத்த  தலைவர்களில் ஒரு பகுதியினர், பாஜக அரசாங்கத்துடன் இரகசியப் புரிந்துணர்வைப் பேணி வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்பூசல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
1976ம் ஆண்டு முதல் காங்கிரசில் இணைந்து பணியாற்றி வரும் அவர் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியைக் குலைப்பதாகவும், இது பாரதிய ஜனதா கட்சி வளரவும் வழி வகுத்தது. 

அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பாஜக அரசுடன் முக்கியமாக முதல் மந்திரியுடன் ரகசிய புரிந்துணர்வு பேணி வருகின்றனர் என்பதை மிகுந்த வலியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மட்டத்திலிருக்கும் தலைவர்கள், தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக  ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில், கட்சியின் மாநிலப் பிரிவுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.இது காங்கிரசின் மீதான மக்களின் நம்பிக்கையை  இழக்க வழிவகுத்தது.

சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலுக்கான கட்சி வேட்பாளராக என்னை இரண்டாவது முறையாக மீண்டும் நியமித்ததற்கு கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் நாட்களில், நமது நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க, பாஜகவுக்கு எதிரான எனது போராட்டத்தை மேலும் வலுவாக தொடர்வேன்” என்று போரா, தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்