டெல்லி: மத பேரணியின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது
டெல்லியில் மத பேரணின் போது மோதல் ஏற்பட்ட நிலையில் அப்போது துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளது.
டெல்லி,
இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் ’அனுமன் ஜெயந்தி’ என கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அனுமன் ஜெயந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தியையொட்டி மத பேரணிகளும் நடைபெற்றது. இந்த பேரணியின் போது சில பகுதிகளில் வன்முறை, மோதல் சம்பவங்களும் அரங்கேறியது.
இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் பேரணி சென்றபோது பேரணி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார். மோதலில் போலீசார் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறையை தொடந்து ஜஹாங்கீர்பூரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதபேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கி நடத்திய நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஜகாங்கீர்பூரியின் சிடி பார்க் பகுதியை சேர்ந்த 21 வயதான அஸ்லாம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அஸ்லாமிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வன்முறை மேலும் பரவாமல் இருக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இரு தரப்பினருக்கும் இடையே போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.