மராட்டிய மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

கோலாப்பூர் வடக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவ் வெற்றி பெற்றார். பா.ஜனதாவை ஆளும் கூட்டணி வீழ்த்தியது.

Update: 2022-04-16 22:32 GMT
இடைத்தேர்தல்

மராட்டிய சட்டசபையில் கோலாப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சந்திரகாந்த் ஜாதவ் இருந்தார். காங்கிரசை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ ஜாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன.

பா.ஜனதா சார்பில் சத்யஜித் போட்டியிட்டார். இவர் பா.ஜனதா மாநில துணை தலைவர் தனஞ்செய் மகாதிக்கின் உறவினர். இவர்கள் உள்பட 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இருப்பினும் காங்கிரஸ்- பா.ஜனதா வேட்பாளர்கள் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.

காங்கிரஸ் வெற்றி

கடந்த 12-ந் தேதி நடந்த தேர்தலில் 61.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவ் அமோக வெற்றி பெற்றார். அவர் 96 ஆயிரத்து 176 வாக்குகள் பெற்று இருந்தார்.

பா.ஜனதா வேட்பாளர் சத்யஜித் கதம் 77 ஆயிரத்து 426 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதாவை ஆளும் கூட்டணி கட்சிகள் வீழ்த்தின.

இந்த தேர்தலில் தனக்காக உழைத்து வெற்றி பெற செய்த கூட்டணி கட்சிகளுக்கு ஜெயஸ்ரீ ஜாதவ் நன்றி கூறினார்.

தலைவர்கள் கருத்து

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நிருபர்களிடம் கூறுகையில், “விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை, விவசாயிகள், சிறு வியாபாரிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் போன்றவற்றில் மத்திய அரசு தோல்வியை சந்தித்துள்ளது. மதவாத பிரச்சினையை தூண்டி விட்டது. இதனையெல்லாம் மனதில் கொண்டு பா.ஜனதாவை தோற்கடித்து, எங்கள் கட்சியை வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்” என்றார்.

வாக்காளர்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

இதற்கிடையே தங்களது தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் மும்பையில் உள்ள திலக் பவன் உள்பட மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மேலும் செய்திகள்