முஸ்லிம்கள் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறி மும்பையில் நடக்க இருந்த கலவரத்தை தடுத்தேன் - பட்னாவிசுக்கு சரத்பவார் பதில்
முஸ்லிம்கள் பகுதியிலும் குண்டு வெடித்ததாக கூறி மும்பையில் நடக்க இருந்த கலவரத்தை தடுத்தேன் என சரத்பவார் கூறியுள்ளார்.;
மும்பை,
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் டுவிட்டரில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். குறிப்பாக சரத்பவார் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில் 1992-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதியில் குண்டு வெடித்ததாக பொய் கூறியதாக கூறியிருந்தார்.
இதேபோல சரத்பவார் சாதி அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து சரத்பவார் கூறுகையில், "இஸ்லாமியர்கள் அதிகமுள்ள ஒரு பகுதியில் குண்டு வெடித்ததாக நான் கூறியதை மறுக்கவில்லை. சித்தி விநாயக் போன்ற இந்துக்கள் அதிகம் உள்ள 11 இடங்களில் தான் குண்டு வெடித்து இருந்தது.
அந்த தாக்குதல் மூலம் இந்தியாவில் இந்து - முஸ்லிம்கள் இடையே கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்ததை உணர்ந்து கொண்டேன். எனவே தான் முகமது அலி ரோட்டிலும் குண்டு வெடித்ததாக கூறினேன். இதனால் இந்து - முஸ்லிம் கலவரம் தடுக்கப்பட்டது " என்றார்.