கர்நாடகத்தில் திருக்குரான் வசனத்துடன் தொடங்கிய கோவில் திருவிழா...

பாரம்பரிய முறைப்படி திருக்குரானில் இருந்து வசனங்கள் ஓதி தேர்த்திருவிழா தொடங்கப்பட்டது.;

Update: 2022-04-15 09:16 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் விவகாரம், கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் மத ரீதியான சர்ச்சைகள் நீடித்து வந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு கோவிலில் திருக்குரான் வசனத்துடன் திருவிழாவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூரில் அமைந்திருக்கும் சென்னகேசவா கோவிலில் தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழாவின் போது இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானில் இருந்து சில வாசகங்கள் ஓதப்படுவது வழக்கம். 

அதன்படி இஸ்லாமிய மதகுருவான மவுலவி சைய்யது சஜ்ஜாத் பாஷா என்பவர் திருக்குரானில் இருந்து வசனங்களை ஓதினார். மேலும் கோவிலுக்கு அருகில் உள்ள தர்காவிற்கு கரகம் எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த நிகழ்வுக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டன. எனினும் கோவில் நிர்வாகமும், பக்தர்களும் அவற்றை பொருட்படுத்தாமல் பாரம்பரிய முறைப்படி திருக்குரான் வசனத்துடன் திருவிழாவை தொடங்கினர். மதரீதியான பிரச்சினைகளுக்கு இடையில் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக கர்நாடகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

மேலும் செய்திகள்