ஊழல் மந்திரியை காப்பாற்ற கர்நாடக முதல்-மந்திரி முயற்சி; காங்கிரஸ் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் ஊழல் மந்திரியை காப்பாற்ற முதல்-மந்திரி பசவராஜ் முயற்சிக்கிறார் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.;

Update: 2022-04-14 07:31 GMT



பெலகாவி,



கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் பாட்டீல்.  காண்டிராக்டரான இவர், ஆளும் பா.ஜ.க.வில் தொண்டராகவும் இருந்துள்ளார்.  இந்நிலையில், இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.

இதனை தொடர்ந்து, போலீசார் பாட்டீலின் போனை ஆய்வு செய்தனர்.  இந்நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே சாம்பவி லாட்ஜில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரியான கே.எஸ். ஈசுவரப்பா, 40 சதவீத லஞ்ச பணம் கேட்டார் என கடந்த இரு வாரங்களுக்கு முன், அவர் அதிரடி குற்றச்சாட்டை கூறினார்.

இந்நிலையில் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார்.  அது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

அதில், தனது மரணத்திற்கு ஈசுவரப்பா காரணம் என குறிப்பிட்டு உள்ளார்.  தனது கனவை தூர வைத்து விட்டு வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என அவர் எழுதியுள்ளார்.

இறுதியாக அந்த குறிப்பில் பா.ஜ.க. தொண்டரான சந்தோஷ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவிடும்படி முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பிரதமர் மோடி ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுபற்றி உடுப்பி போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  எனினும், தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் பாட்டீல் யார் என்று எனக்கு தெரியாது என மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் எனக்கு தெரியாது. நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை. நான் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவது இல்லை. இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். அதுவரை நான் மந்திரி பதவியில் நீடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, போராட்டம் நடத்துவதற்கு காங்கிரசுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

ஊழலின் பிறப்பிடமே காங்கிரஸ்தான்.  பாட்டீலின் பிரேத பரிசோதனை நேற்றே நடந்து முடிந்து விட்டது.  அதுபற்றிய அறிக்கை வரும்.  அதன் அடிப்படையிலேயே நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என கூறியுள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார் கூறும்போது, ஊழல் மந்திரியை காப்பாற்ற கர்நாடக முதல்-மந்திரி விரும்புகிறார்.  இந்த ஒட்டுமொத்த நடைமுறையில் அவருக்கும் பங்கு உள்ளது என நான் நினைக்கிறேன்.

பா.ஜ.க. மற்றும் தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று அவர் (பசவராஜ்) விரும்பினால், உடனடியாக கைது (ஈசுவரப்பாவை) நடவடிக்கை எடுத்து, ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்