வட கிழக்கு மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமா? மாணவர் அமைப்பு போர்க்கொடி
அமித் ஷா, 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கோஹிமா, ஏப்.14-
டெல்லியில் கடந்த 7-ந் தேதி நாடாளுமன்ற அலுவல் மொழிக்கூட்டம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இது வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. இதற்கு எதிராக வடகிழக்கு மாணவர் அமைப்பு (நெசோ) போர்க்கொடி உயர்த்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அந்த கடிதத்தில், “ இந்தி மொழியைப் பிராந்தியத்தில் கட்டாய பாடமாக திணிப்பது பழங்குடி மொழிகளின் பரவலுக்கு தீங்கு ஏற்படுத்தும். ஏற்கனவே உள்ள பரந்த பாடத்திட்டத்தில், மற்றொரு கட்டாய பாடத்தை சேர்க்க நிர்ப்பந்திப்பது மாணவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இது ஒற்றுமைக்கு வழி வகுக்காது. இது அச்சத்தையும், நல்லிணக்கமின்மையையும் ஏற்படுத்தும” என கூறப்பட்டுள்ளது.
“இதற்கு பதிலாக வடகிழக்கு பூர்வீக மொழிகளை மேலும் மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.