ஆந்திர மாநில அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்பு..!!
ஆந்திரப் பிரதேசத்தின் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமராவதி ,
ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு மந்திரி பதவி உறுதி செய்யப்பட்டது. புதியதாக பதவி ஏற்க போகும் மந்திரிசபை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்த மந்திரிகளில் அனுபவம் வாய்ந்த 10 பேரோடு புதிதாக 15 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர அமைச்சரவையில் இருந்த 11 பேரைத் தவிர மற்றவர்கள் ராஜிநாமா செய்த நிலையில், நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா உள்பட 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2004 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா தொடர்ந்து வெற்றி பெற்று 2 முறை எம்.எல்.ஏ. வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டின் அருகில் தொண்டர்களும், நடிகை ரோஜாவின் ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.