அமெரிக்க அதிபர் ஜோபைடன் - பிரதமர் மோடி காணொலி மூலம் நாளை பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருதலைவர்களும் காணொலி வாயிலாக நாளை சந்திக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. எனினும், இந்த தடைகளையும் மீறி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலுக்கு இந்தியா தயாராகி உள்ளது.
இத்தகைய சூழலில், ஜோபைடன் - பிரதமர் மோடி இடையே நடைபெற உள்ள சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது. காணொலி வாயிலான இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இரு தரப்பு விவகாரங்கள், தெற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மற்றும் சர்வதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து பேசலாம் எனத்தெரிகிறது.
அமெரிக்கா- இந்தியா இடையேயான 2+2 பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜோபைடன் - பிரதமர் மோடி இடையேயான காணொலி வாயிலான சந்திப்பு நடைபெற உள்ளது. அமெரிக்கா - இந்தியா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.