தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து நிகழும் தீ விபத்துகள்..!

இன்று நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், மோரி கேட், நிக்கல்சன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-04-10 07:29 GMT
புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள காஜிபூர் குப்பை கிடங்கில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.  இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நள்ளிரவு 1 மணியளவில் அதாவது, மூன்று மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் கூறியதாவது, “குப்பை மேடுகளுக்கு தீ பரவி, புகை கிளம்பியதையடுத்து, இரவு 10.30 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனே 10-15 நிமிடங்களுக்குள் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. நாங்கள் விரைந்து செயல்பட்டு முதலில் தீயை கட்டுப்படுத்தினோம்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், கொண்ட்லியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு சவாலாக இருந்தது” என்றனர்.

இதற்கிடையே, இன்று காலை, பீராகரி சவுக்கில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏழு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என்றும் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதே போல, இன்று நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், மோரி கேட், நிக்கல்சன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து  ஏற்பட்டது. 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என்றும் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்