அரியானா மந்திரியின் சர்ச்சை பேச்சுக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பதிலடி

அரியானா மந்திரியின் ஆட்டோ ஓட்டுனர் சர்ச்சை பேச்சுக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2022-04-08 15:05 GMT


சண்டிகார்,



பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.  அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

அவரது அமைச்சரவையில் ஒரு பெண் உள்பட 10 பேர் மந்திரிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், பா.ஜ.க. ஆளும் அரியானா மாநில மின்துறை மந்திரி ரஞ்சித் சிங் இன்று பேசும்போது. பஞ்சாப்பில் நிதி நிலைமை மிக மோசம் அடைந்து உள்ளது.  அவர்கள் (ஆம் ஆத்மி மந்திரிகள்) அனுபவம் அற்றவர்கள்.

அவர்களில் ஒருவருக்கு கூட அரசியல் முன்அனுபவம் என்பது இல்லை.  மந்திரிகளில் 90% பேர் சட்டசபையை இதுவரை பார்த்தது கூட இல்லை.  அவர்களில் சிலர் மொபைல் போன் ரிப்பேர் செய்பவர்களாகவும், ஒரு சிலர் ஆட்டோ ஓட்டுனராகவும் உள்ளனர் என கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பஞ்சாப்பின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மன்வீந்தர் சிங் கியாஸ்புரா பேசியுள்ளார்.  அவர் கூறும்போது, மந்திரியின் பேச்சுகள் சரியானவையே.  நாங்கள் இதுவரை சட்டசபையை பார்த்தது இல்லை.  நாங்கள் சாதாரண பொதுமக்கள்தான்.  எங்களுடைய எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மருத்துவர்களாக உள்ளனர்.  14 பேர் வழக்கறிஞர்கள்.

இதுதவிர 16 பேர் என்ஜீனியர்களாக உள்ளனர்.  இந்த மந்திரிகள் போன்று ஊழல் செய்வதற்கு பதிலாக, நாட்டை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்று பதிலடியாக கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்