நட்புன்னா என்னான்னு தெரிஞ்சுக்கோங்க... வைரலான ஆனந்த் மகிந்திராவின் வீடியோ பதிவு

ஆமை ஒன்று மற்றோர் ஆமைக்கு உதவும் செயலை வீடியோவாக வெளியிட்டு நட்பு பற்றி தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.;

Update: 2022-04-08 11:21 GMT



புதுடெல்லி,



தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டரில் அவ்வப்போது மகிழ்ச்சியான, வித்தியாசம் நிறைந்த மற்றும் ஆச்சரியமூட்ட கூடிய பதிவுகளை வெளியிட்டு படிப்பவர்களை உற்சாகமூட்டி வருபவர்.  அவர் தனது சமீபத்திய பதிவில், நட்பு பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு வாசக நெஞ்சங்களை அள்ளியுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், டர்னிங் டர்டில் என்ற ஆங்கில சொற்றொடரானது, தலைகீழாக புரட்டிப்போடுவது என்று பொருள்.  ஆனால், இந்த வீடியோவை பார்த்த பின்பு, உதவி தேவையாக உள்ள நண்பருக்கு உதவுவது என்பதே இதன் பொருளாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

உங்களது சொந்த காலில் நீங்கள் மீண்டும் எழுந்து நிற்கவும், வளர்ச்சி பெறவும் உதவும் நண்பரை கொண்டிருப்பது, வாழ்வில் கிடைத்த மிக சிறந்த பரிசுகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த வீடியோவின் தொடக்கத்தில், சரிவில் அமைந்த புல்வெளி மீது ஆமை (டர்டில்) ஒன்று மல்லாக்க கிடக்கிறது.  அதனால், இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.  தனது நான்கு கால்களையும் வானை நோக்கி காற்றிலேயே உதைத்து, திரும்ப முயற்சித்தும் அது பலன் தரவில்லை.

இதனை சற்று தொலைவில் இருந்தபடி மற்றொரு ஆமை பார்த்து கொண்டிருக்கிறது.  பார்த்த தருணத்தில் ஆமை வேகத்தில் இல்லாமல், விறுவிறுவென தனது நண்பனை நோக்கி சென்று அதனை முட்டி, மோதி திருப்பி போடுகிறது.

இதன்பின் சீரான நிலைக்கு வந்த அந்த நண்பன் ஆமை மெதுவாக முன்னோக்கி நடந்து செல்கிறது.  ஒரு சில வினாடிகளே ஓட கூடிய இந்த வீடியோவை பதிவிட்ட சில மணிநேரங்களில், 5 லட்சம் லைக்குகள் பெறப்பட்டு உள்ளன.  வாசகர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர், விலங்கு ராஜ்ஜியத்தில் கண்ணியத்திற்கான மிக சிறந்த எடுத்துக்காட்டு இது.  இதில், உங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நீங்கள் நண்பர்களை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.  அதனால், நீங்கள் உதவுகிறீர்கள் என பதிவிட்டு உள்ளார்.  மற்றொரு நபர், ஆபத்து காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்ற பழமொழியை நினைவுப்படுத்தி பதிவிட்டு உள்ளார்.

இன்னொரு நபர், இதுபோன்ற சிறந்த நண்பரை பெற்ற அதிர்ஷ்டகார ஆமை அது என்று தெரிவித்து உள்ளார்.



மேலும் செய்திகள்