முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம் - சுப்ரீம் கோர்ட்டு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2022-04-07 07:09 GMT
கோப்புப் படம்
புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம் புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுமீது இன்று நடைபெற்ற விசாரணையில், கேரள அரசு, தேசிய அணை ஆணையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்வரை முல்லைப் பெரியாறு அணைக்கான கண்காணிப்பு குழு கூடுதல் அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்பதாக கூறியது. 

தேசிய அணை ஆணையத்தை நிர்மாணிக்க காலக்கெடுவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கேரள அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது. மேலும் தேசிய அணை ஆணையத்தை உருவாக்க ஏன் மத்திய அரசு 1 வருடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் கேரள அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் தேசிய அணை ஆணையம் செயல்படும் வரை, கண்காணிப்பு குழு முழு அதிகாரத்துடன் செயல்படுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்ட அணையை பலப்படுத்தும் பணிகள் இதுவரை நடைபெறாமல் இருப்பதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை விதிப்பதாக குற்றச்சாட்டை தமிழக அரசு முன்வைத்தது.

இந்த நிலையில் நீதிபதிகள் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம். புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர். 

மேலும் மனுதாரர்கள் தொடர்ந்து அணை பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினையை எழுப்பியபோது, குறிப்பாக கண்காணிப்பு குழு குறித்து விமர்சனத்தை முன்வைத்த போது, நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள அணை கண்காணிப்பு குழு மீது எந்த வித அடிப்படை ஆதாரமுமின்றி குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்