தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்..! - காங்கிரஸ் கோரிக்கை
தனியார் மருத்துவ கல்லூரி கல்வி கட்டணங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.;
புதுடெல்லி,
மாநிலங்களவையில், காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், தனியார் மருத்துவ கல்லூரிகள் பிரச்சினையை எழுப்பினார்.
அவர் பேசியதாவது:-
நாட்டின் மொத்த மருத்துவ கல்லூரிகளில் 53 சதவீதம் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரிகளாக உள்ளன. மற்றவை தனியார் மருத்துவ கல்லூரிகள் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன.அக்கல்லூரிகளில் 40 சதவீத இடங்களுக்கு கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவர கடந்த 2017-ம் ஆண்டு ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதை 50 சதவீத இடங்களாக நாடாளுமன்ற நிலைக்குழு உயர்த்தியது.
இந்த சட்டவரம்புக்கு உட்படாத மீதி 50 சதவீத இடங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டண கொள்ளை நடத்துகின்றன.
எனவே, அவற்றின் கல்வி கட்டணங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ‘இப்போது கட்டணம் செலுத்துங்கள், பிறகு படியுங்கள்’ என்று தற்போதைய கட்டண கொள்கை உள்ளது. அதை ‘இப்போது படியுங்கள், பிறகு கட்டணம் செலுத்துங்கள்’ என்று மாற்ற வேண்டும்.
நாட்டில் டாக்டர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது. தனியார் மருத்துவ கல்விதான், நாட்டின் மருத்துவ கல்விக்கு அடித்தளம் அமைக்கும் என்ற நம்பிக்கை ஆபத்தானது என்று அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் பேசுகையில், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் சில பகுதிகளில் இன்னும் நீடிப்பதாக குற்றம் சாட்டினார்.
தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், ‘‘மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
ராமர் தனது வாழ்க்கையில் நடமாடிய 250 இடங்களை மேம்படுத்த சிறப்பு நிதித்திட்டத்தை அறிவிக்குமாறு பா.ஜனதா உறுப்பினர் அஜய் பிரதாப்சிங் கூறினார்.