இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை - ஜெய்சங்கர் தகவல்
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் கடந்த 42 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் ரஷியப்படையினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
குறிப்பாக, உக்ரைனின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்ற ரஷியா தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருதால் போரால் பலரும் இயல்பு வாழ்வை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கஜகஸ்தான் ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ளதாகவும்
மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு என்றும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசுகையில், இராஜதந்திரத்தைப் பொறுத்தவரை, போர்களை உடனடியாக நிறுத்துவதற்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இரு நாட்டின் தலைவர்களிடமும். இது தொடர்பாக பிரதமர் அவர்கள் இருவரிடமும் பேசினார்.
ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் டெல்லி வந்த போது அவருக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி இதுதான். போர் தொடர்பான விஷயத்தில் இந்தியா ஏதேனும் உதவி செய்ய முடிந்தால், நாங்கள் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.