புதன்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினம் - லட்சத்தீவு நிர்வாகம் அறிவிப்பு
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது.;
கவரட்டி,
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவிக்கப்படுகிறது என்று லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சைக்கிள் தினம் நாளை(ஏப்ரல் 6) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்ற 13-வது லட்சத்தீவு மாசுக் கட்டுப்பாட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கான சைக்கிள் தினமாக அறிவிக்கிறது.
இந்த நாளில் (அதாவது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை) அனைத்து அதிகாரிகள்/பணியாளர்கள் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் தவிர) பணிக்கு வரும்போது மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடாது. லட்சத்தீவு யூடியின் அனைத்து தீவுகளிலும் சைக்கிள்கள் போன்ற மோட்டார் அல்லாத போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.