கேரளா: மதம் சம்பந்தப்பட்ட அமைப்புக்கு பயிற்சி - தீயணைப்புத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்
கேரளாவில் மதம் சம்பந்தப்பட்ட அமைப்புக்கு பயிற்சி அளித்ததாக கூறி தீயணைப்புத்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் புதிதாக மீட்பு மற்றும் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான மாநில அளவிலான தொடக்க விழா எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவாவில் நடந்தது.
இதில் அந்த அமைப்பினருக்கு ஆபத்தான காலம் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து கேரள தீயணைப்பு படை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மதசார்பு அமைப்பாக செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு கேரள தீயணைப்பு படை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து மத, அரசியல் அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்க தடை விதித்து கேரள தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் தலைமை உயர் அதிகாரி பி.சந்தியா சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதே சமயத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு பயிற்சி அளித்த விவகாரத்தில், எர்ணாகுளம் மண்டல தீயணைப்பு படை தலைமை அதிகாரி, மாவட்ட தலைமை அதிகாரி மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பி.சந்தியா சிபாரிசு செய்து இருந்தார்.
இந்தநிலையில் எர்ணாகுளம் மண்டல தீயணைப்பு படை தலைமை அதிகாரி, மாவட்ட தலைமை அதிகாரி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். மற்றவர்கள் மீது துறை ரீதியாக இடம் மாற்றம் உள்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.