“அரியானாவின் தலைநகராக சண்டிகர் நீடிக்கும்” - பஞ்சாப் சட்டசபை தீர்மானம் குறித்து மனோகர் லால் கட்டார் கருத்து

சண்டிகரை முழுமையாக பஞ்சாபிற்கு மாற்ற வேண்டும் என்று பஞ்சாப் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-04-03 14:10 GMT
சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அரியானா தனியாக பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60 சதவீதமும் ஹரியானா 40 சதவீதமும் நிர்வகித்து வந்தன. 

இந்த நிலையில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், ‘மத்திய சேவை விதிகளால், சண்டிகர் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் ஆபத்து உள்ளது’ என குற்றம் சாட்டினார். 

இந்த நிலையில்,  சண்டிகரை முழுமையாக பஞ்சாபிற்கு மாற்ற வேண்டும் என்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் முன்மொழிந்த தீர்மானம், பாஜகவை தவிர அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சாபில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், “தலைநகர் சண்டிகரை மாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அரியானாவின் தலைநகராக சண்டிகர் இருந்தது, இருக்கிறது, இனி வரும் காலங்களிலும் அப்படியே நீடிக்கும். அரியானாவின் மக்கள் எங்களோடு இருக்கும் வரை சண்டிகரை மாற்றுவது என்பது நிகழாது” என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்