கொரோனா பரவல்; முதல் தடுப்பூசி உதவியை இந்தியாவிடம் இருந்து பெற்றோம்: நேபாள பிரதமர்
நேபாளத்தில் கொரோனா பரவலின்போது, இந்தியாவிடமிருந்து முதல் தடுப்பூசி உதவி எங்களுக்கு கிடைக்க பெற்றது என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி டெல்லி வந்து சேர்ந்த அவர் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகருக்கும் அவர் செல்கிறார். பா.ஜ.க.வின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்து பேசுகிறார்.
இந்த நிலையில், நேபாள பிரதமர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசி வருகிறார். வருகிற 3ந்தேதி வரை நேபாள பிரதமர் தூபா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்காள்கிறார்.
இந்தியாவுக்கு அவர் வருகை தருவது என்பது முன்பே திட்டமிடப்பட்ட பயணம் ஆகும். இந்த பயணத்தில், இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூபா பேசும்போது, பிரதமர் மோடி குறிப்பிட்டது போல், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாட்டு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் பற்றி நாங்கள் நட்புரீதியான பேச்சுகள் மற்றும் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். எங்களின் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த எங்களது நோக்கங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா டெல்லியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சியை நான் பாராட்டுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவின் திறமையான மேலாண்மையை நாங்கள் பார்த்தோம்.
இந்தியாவிடமிருந்து முதல் தடுப்பூசி உதவி எங்களுக்கு கிடைக்க பெற்றது. அதனுடன், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற தளவாட பொருட்களும் இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு கிடைத்தன என்று அவர் தெரிவித்து உள்ளார்.