ஆலப்புழா: காற்றில் பறப்பது போல் உள்ள அப்பம்-முட்டை மாசலுக்கு 185 ரூபாயா? எம்எல்ஏ புகார்..!
ஓட்டலில் அதிக விலைக்கு உணவு விற்கப்படுவதாக எம்எல்ஏ புகார் தெரிவித்ததை அடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
கேரளா,
தன்னிடம் காலை உணவிற்கு அதிக பணம் வாங்கிய ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்எல்ஏ மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்ததை அடுத்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூறப்படுவது,
ஆலப்புழா மாவட்டத்தில் ஹோட்டல்களில் சாப்பிட செல்லும் பொதுமக்களிடம் அதிக பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணி அளவில் ஆலப்புழா அருகே உள்ள கனிச்சகுளங்கரை என்ற பகுதியில் உள்ள ஒரு சாதாரண ஓட்டலுக்கு எம்எல்ஏ சித்தரஞ்சன் என்பவர் காலை உணவு அருந்த சென்றார்.
அவர் அங்கு சாப்பிட்டது ஐந்து அப்பம் மற்றும் ஒரு முட்டை மசாலா. இவற்றிற்கு ஓட்டல் நிர்வாகம் 185 ரூபாய் என பில் போட்டுள்ளனர். பில்லை பார்த்த எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்து ஓட்டல் உரிமையாளரிடம், மின்விசிறியை கொஞ்சம் அதிகமாக சுத்த விட்டால் பறந்துவிடும் போல் உள்ள ஐந்து அப்பத்துக்கும் ஒரு முட்டை மசாலாக்கும் ரூபாய் 125 ரூபாய் மட்டுமே கொடுக்கலாம். ஆனால் நீங்கள் 60 ரூபாய் கூட்டி 185 ரூபாய் பில் கொடுத்துள்ளீர்கள், என உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. உடனடியாக எம்எல்ஏ சித்தரஞ்சன் ஆலப்புழை மாவட்ட கலெக்டர் ரேணு ராஜ் இடம் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட கலெக்டர் மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரியை அழைத்து எம்எல்ஏ கொடுத்த புகாரை உடனடியாக விசாரித்து எனக்கு தகவல் தாருங்கள் என உத்தரவிட்டுள்ளார்.