முக கவசத்தை கைவிட இன்னும் நேரம் வரவில்லை - ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பிரியா ஆபிரகாம்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட இன்னும் நேரம் வரவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பிரியா ஆபிரகாம் கூறியுள்ளார்.
புனே,
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட இன்னும் நேரம் வரவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஐ.சி.எம்.ஆர் என்.ஐ.வி) இயக்குனர் டாக்டர் பிரியா ஆபிரகாம் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பிரியா ஆபிரகாம் கூறியதாவது, 'நாட்டில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. இது நல்ல விஷயம். ஆனாலும் நெரிசல் மிகுந்த இடங்களில் தொடர்ந்து முக கவசம் அணியுங்கள். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் முக கவசத்திற்கு நிச்சயமாக பங்கு உள்ளது.
நாம் இன்னும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட இன்னும் நேரம் வரவில்லை' என்று கூறினார்.