கணிசமான தள்ளுபடியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் ரஷியா
உக்ரைனுடனான உக்கிரமான போருக்கு இடையிலும் இந்தியா ரஷியாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது.
புதுடெல்லி
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படையால் கைப்பற்ற முடியவில்லை.போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது.
உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ரஷியா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு டாலர் 35 என்ற அளவிற்கு கணிசமான தள்ளுபடியில் வழங்கியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. போருக்கு முந்தைய விலையை விட ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் கணிசமான தள்ளுபடி விலையாகும்
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு காரணமாக பல மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில்,இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்க ரஷியா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று ரஷியா விரும்புகிறது. மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஆசியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, சர்வதேச அழுத்தம் மற்றும் தடைகளை மீறி, ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை இரட்டிப்பாக்கி வரும் ஒரு சில நாடுகளில் ஒன்றாகும்.
முன்னதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷியாவிடமிருந்து 20-25 சதவீத தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.
அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இது இந்தியாவை பெரிய ஆபத்தில் தள்ளக்கூடும் என்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.