இலங்கை பொருளாதார சிக்கல் இந்தியாவுக்கு ஒரு பாடம் ; கேரள நிதி மந்திரி
இலங்கை பொருளாதார சிக்கல் இந்தியாவுக்கு ஒரு பாடம், பொருளாதார கொள்கைகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கேரள நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது.
இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. ஏற்கனவே 10 ஆயிரம் கோடி ரூபாயை நிதி உதவியாக இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. மேலும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கல் இந்தியாவுக்கு ஒரு பாடம் என்று கேரள நிதிமந்திரி கேஎன் பாலகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆக்ரோஷமான உலகமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றியதாலேயே இலங்கையில் தற்போது இந்த பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையை போன்றே இந்தியாவும் அதேமாதிரியான பொருளாதார கொள்கைகளையே பின்பற்றி வருகிறது.
இந்திய பொருளாதாரத்தில் உள்ள பிரச்சினைகளை போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கு மேற்பட்ட தொகை கடன் மூலம் பெறப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் போதுமான முதலீடு செய்யப்படவில்லை. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் நாட்டை ஆபத்தான கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன’ என்றார்.