ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு!
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7:29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில், லே(அல்ச்சி) பகுதியில் இருந்து வடக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டுவிட்டரில், “ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற புள்ளிக் கணக்கில் இன்று காலை 7:29 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது லடாக்கில் அமைந்துள்ள லே மாவட்டம் அல்ச்சி கிராம பகுதிக்கு வடக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.