ஜம்முவில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவாக அதிகரித்த வெப்பநிலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
ஜம்மு,
குளிர் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜம்முவில் அதிகபட்ச வெப்பநிலையாக இன்று 37.3 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது மார்ச் மாதத்தில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் சோனம் லோட்டஸ் தெரிவித்தார்.
ஜம்முவில் கடந்த மார்ச் 31, 1945 அன்று அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது பதிவாகியுள்ளது. அதற்கு பிறகு இன்றுதான் அதிகபட்ச வெப்பநிலையாக 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குளிர்கால தலைநகரான ஜம்முவில் இந்த பருவத்தின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 8.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் கடந்த நான்கு நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வுக்கான அமைப்புகள் இல்லாததால் வானிலை தெளிவாக உள்ளதாகவும், இதனால், அடுத்த சில நாட்களுக்கு வறண்ட மற்றும் வெப்பமான வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.