காங். ஆட்சியில் காஷ்மீரில் பங்கரவாதம் எப்படி வளர்ந்தது என்பதை அறிய "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" பாருங்கள் - அமித் ஷா
காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீரில் பயங்கரவாதம் எப்படி இருந்தது என்பதை அறிய "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தை பாருங்கள் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீரில் பயங்கரவாதமும், அட்டூழியங்களும் எப்படி நடந்தன என்பதை அறிய, மக்கள் "தி காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறியதாவது:-
"தி காஷ்மீர் பைல்ஸ்" படத்தைப் பார்க்காதவர்கள், காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீரில் எப்படி பயங்கரவாதமும், அட்டூழியங்களும் நடந்தது என்பதை அறிய, படத்தைப் பார்க்க வேண்டும்.
நீங்கள் 2-வது முறையாக மோடியை பிரதமராக்கியதும், ஆகஸ்ட் 5, 2019 அன்று அவர் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினார். மோடி அதைச் செய்ய முடிவு செய்திருந்த தருணத்தில், மோடியைப் போல் வலுவான மன உறுதி கொண்ட ஒரு தலைவர் நாட்டை வழிநடத்தினால், முடியாதது எதுவுமில்லை என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள் உணர்ந்தனர்.
இதற்கிடையில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு சிறந்த ஏற்றுமதி நாடுகளின் வரிசையில் உயர்ந்துள்ளது என்று கூறினார்.
அதற்கு முந்தைய நாள் காந்திநகரில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 4 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் மகத்தான வெற்றி, இந்தியாவை பாதுகாப்பான, செழிப்பான மற்றும் சக்திவாய்ந்ததாக மாற்ற பிரதமர் மோடி மேற்கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஏற்றுக்கொண்டதற்கு ஒரு சான்று. இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் முடிந்துவிட்டது, எங்கும் காணப்படவில்லை. மகத்தான வெற்றி மோடியின் தலைமையில் இந்திய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
அமித்ஷா தனது மக்களவைத் தொகுதியான காந்திநகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.367 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.