மின் உற்பத்திக்கு நிலக்கரி கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை - மத்திய அரசு
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி அளவை கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சார அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால், அதனைச் சரிசெய்ய ஏற்கனவே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை என்பதை அமைச்சகம் கூறியுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதவிர, மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.