விமான நிலையத்தில் 80 வயது மூதாட்டி ஆடையை களைந்து சோதனை
பாதுகாப்பு சோதனையில் 80 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியின் ஆடையை களையக் கோரிய வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;
கவுகாத்தி:
நாகலாந்தை சேர்ந்தவர் மொகலோ கிகோன் (வயது80) மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தனது பேத்தியுடன் டெல்லி செல்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் அவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது மொகலோ கிகோன் இடுப்பு பகுதியில் இருந்து ஒரு விதமான சத்தம் எழுந்தது.
அவர் இடுப்பு ஆபரேஷன் செய்து இருந்ததால் பிளேட் வைத்து இருந்தார். இதனால் இந்த சத்தம் வந்ததாக தெரிகிறது.
சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர் அவரை சோதனை செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது நிலை குறித்து விளக்கி கூறினார். ஆனாலும் அதை மீறி அவர்கள் அந்த பெண்ணின் ஆடையை களைந்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக அவரது மகள் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மூதாட்டியின் ஆடையை களையக் கோரிய வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.