குடிமக்கள் மீது கருணையின்றி தாக்குதல்; புதினுக்கு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் கண்டனம்

குடிமக்கள் மீது ரஷிய படை கருணையின்றி தாக்குதல் நடத்தி வருவதற்கு புதினுக்கு எதிராக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-03-24 10:56 GMT



புதுடெல்லி,


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது.  
போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன.  தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தியும் வருகின்றன.  எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து விட்டது.  இதனால், ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன.

உக்ரைன் மீது போர் தொடுக்கவில்லை.  நாங்கள் மேற்கொள்வது, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.  உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்தது.

இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினுக்கு, இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜே. லிண்ட்னர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷிய படைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிமக்கள் மீது கருணையின்றி தாக்குதல் நடத்தி வருகிறது.  இது ஏற்று கொள்ள முடியாதது.  புதின் இரக்கமின்றி குடிமக்கள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறார்.

ரஷியா மீது தாக்குதலோ அல்லது எந்தவித அச்சுறுத்தலோ விடுக்காத ஒன்றுமறியாத அண்டை நாடு ஒன்றின் மீது புதின் மேற்கொண்டுள்ள போரானது ஒரு மோசமான உதாரணம்.

வருங்காலத்தில் எந்தவொரு சக்தி வாய்ந்த நாடும், தனது எல்லை விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு புதினை எடுத்துக்காட்டாக கொள்ள கூடிய தவறான நிலை உள்ளது.  புதினே போர் தொடுத்துள்ளார்.  நாமும் நமது அண்டை நாடு மீது தாக்குதல் நடத்துவோம் என பிற முக்கிய நாடுகள் முடிவெடுத்து விட்டால் நாம் என்ன செய்ய முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை (உக்ரைனில் நடந்து வரும் போர்) ஒருவராலேயே நிறுத்த முடியும்.  அது புதின்.  அவர் போரை நிறுத்தவில்லை.  தொடர்ந்து அவர், மக்கள் சாகட்டும், பாதிக்கப்படட்டும் என விட்டு விட்டார்.  அவர் ஒருவரே இதற்கு பொறுப்பு என உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.




மேலும் செய்திகள்