மேற்கு வங்காளத்தில் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல்
பீர்பூம் மாவட்டதில் நடந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. .
இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலையும், 5 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அதே போல் வன்முறையில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.