காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை - இந்தியா
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை மந்திரியின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்’ 48வது அமர்வில், சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “காஷ்மீர் விவகாரத்தில் பல இஸ்லாமிய நண்பர்கள் தொடர்ந்து அழைத்து பேசி வருகின்றனர். சீனாவும் காஷ்மீர் விவகாரத்தில் நம்பிக்கையுடன் செயல்படுகிறது” என்றார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை மந்திரியின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியிருப்பதாவது,
“பாகிஸ்தானில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தின் தொடக்க விழாவில் சீன வெளியுறவு மந்திரி வாங் யீ தனது உரையின் போது இந்தியாவைப் பற்றி தெரிவித்த குறிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விஷயங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் ஆகும்.
காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்க, சீனா உட்பட மற்ற நாடுகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
இந்தியா தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி பொதுத் தர்ப்பில் விவாதிப்பதை விட்டு விலகியே இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.