டெல்லி: வீட்டில் மைக்ரோவேவ் அடுப்பில் இறந்து கிடந்த 2 மாத பெண் குழந்தை
டெல்லியில் வீட்டில் உள்ள மைக்ரோவேவ் அடுப்பில் 2 மாத பெண் குழந்தை இறந்து கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
தெற்கு டெல்லியில் சிராக் தில்லி பகுதியில் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், வீட்டில் உள்ள மைக்ரோவேவ் அடுப்பில் 2 மாத பெண் குழந்தை இறந்து கிடக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி சம்பவ இடத்திற்கு டெல்லி போலீசார் உடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த வீட்டுக்கு அருகே வசித்தவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தது தெரிய வந்துள்ளது. குழந்தை இறந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை.
இதனை தொடர்ந்து டி.சி.பி. மேரி ஜெய்கர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடுப்பு பல நாட்களாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. அதனுள் பெண் குழந்தையை யார் வைத்தது என்று தெரியவில்லை.
குழந்தைக்கு தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை. குழந்தை இறந்ததற்கான காரணம் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. குழந்தையின் தந்தை மற்றும் மாமா வீட்டின் கீழ்தளத்தில் சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மறைந்துள்ள விசயங்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என போலீசார் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவிலேயே கொலைக்கான காரணம் தெரிய வரும். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.