’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் கருத்து
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை,
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது.
இந்த திரைப்படம் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் இந்த திரைப்படம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடர்பாக எழுத்துவரும் அரசியல் ரீதியிலான விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரம் போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் அரசியல் செய்வது சரியானதல்ல. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு திரைப்படம் தான். இது தேர்தல்களில் யாருக்கேனும் அரசியல் ரீதியிலான பலனை அளிக்கும் என நான் நம்பவில்லை. தேர்தல் வரும் காலத்தில் இந்த திரைப்படம் கடந்து சென்றிருக்கும். தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறப்பட்ட காஷ்மீர் பண்டிகள் மீண்டும் எப்போது காஷ்மீருக்கு திரும்புவார்கள் என்பது குறித்து பிரதமர் மோடியும் பாஜகவும் பார்க்க வேண்டும்’ என்றார்.