ராஜஸ்தான் முதல்-மந்திரி மகன் மீது பல கோடி ரூபாய் மோசடி புகார்
ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட்டின் மகன் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார் என எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நாசிக்,
ராஜஸ்தான் முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் வைபவ் கெலாட். இந்த நிலையில், மராட்டியத்தின் நாசிக் நகரை சேர்ந்த நபர் ஒருவர் வைபவ் மீது பல கோடி ரூபாய் மோசடி புகார் கூறியுள்ளார்.
இதுபற்றி கங்காபூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரியாஸ் ஷேக் கூறும்போது, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 16 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சுஷில் பாட்டீல் என்பவர் அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
நடந்த சம்பவம் பற்றி சுஷில் கூறும்போது, 2018ம் ஆண்டு சச்சின் வல்ரே என்ற காங்கிரஸ்காரர் என்னை தொடர்பு கொண்டார். அவர், ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட்டுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால், அரசு வழங்க கூடிய ஒப்பந்தங்களை நான் மேற்பார்வை செய்து வருகிறேன் என கூறினார்.
அவர் கூறியதன்படி, அரசு ஒப்பந்தங்களை கையாளும் தனியார் நிறுவனம் ஒன்றில் பார்ட்னராக சேர்ந்தேன். ரூ.6.8 கோடி அதில் முதலீடும் செய்தேன். எனது முதலீட்டிற்கான வருமானம் வராதபோது, அவர்களிடம் அதுபற்றி கேட்டேன்.
இதில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கும், எனக்கும் இடையே வீடியோ கால் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், எனது முதலீட்டிற்கான வருவாய் அளிக்கப்படும் என கெலாட் உறுதி கூறினார். எனினும், அதில் பலனில்லை என தெரிவித்து உள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளேன். எனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுகிறேன். அதனால், எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசையும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.