காதல் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு: புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
காதல் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.
பெங்களூரு
பெங்களூரு சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காயத்ரிநகரில் வசித்து வருபவர் ராகேஷ். இவரது மனைவி விந்தியாஸ்ரீ. இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ராகேசுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அந்த பெண்களுடன் ராகேஷ் அடிக்கடி ‘சாட்டிங்’ செய்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த விந்தியாஸ்ரீ, ராகேசிடம் கேட்டு உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த விந்தியாஸ்ரீ தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த சுப்பிரமணியபுரா போலீசார் அங்கு சென்று விந்தியாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருந்தனர். அந்த கடிதத்தில் ராகேசுக்கு பல பெண்களுடன் இருந்த தொடர்பு குறித்து எழுதி இருந்த விந்தியாஸ்ரீ, ராகேசை திருமணம் செய்து ஏமாற்றம் அடைந்து விட்டதாகவும் எழுதி இருந்தார்.
மேலும் நான் சந்தித்தவர்களில் ராகேஷ் மிகவும் மோசமான நபர், சைக்கோ என்றும் எழுதி இருந்தார். மேலும் பெண்கள் பாலியல் பொருள் அல்ல. அவர்களுக்கும் உணர்வு உள்ளது என்றும் கூறி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விந்தியாஸ்ரீயின் தந்தை அளித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகேசை கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.