பிரதமராக மோடி பொறுப்பேற்றபின் காஷ்மீரில் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது - அமித்ஷா
பிரதமராக மோடி பொறுப்பேற்றபின் காஷ்மீரில் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
இந்தியாவின் பாதுகாப்பு பணியில் மிகவும் முக்கியமான அங்கமாக செயல்பட்டு வரும் படைப்பிரிவுகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கிடையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பிரிவு உருவாக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 83-வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற்றும் நிலையில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்ற பின்னர் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய வெற்றி என்பது அங்கு பயங்கரவாதத்தை நமது பாதுகாப்பு படையினர் கட்டுக்குள் கொண்டுவந்தது தான்’ என்றார்.