நடப்பு ஆண்டில் 10 வீரர்கள் தற்கொலை; சி.ஆர்.பி.எப். டி.ஜி. வேதனை
நடப்பு ஆண்டில் சி.ஆர்.பி.எப்.பின் 10 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என காஷ்மீருக்கான டி.ஜி. வேதனை தெரிவித்து உள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) டி.ஜி. செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அவர் கூறும்போது, நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், 41 வி.ஐ.பி.க்களுக்கு சி.ஆர்.பி.எப். படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்த பின்பு, 27 பேரது பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு கல்வீச்சு சம்பவங்கள் ஏறக்குறைய பூஜ்ய எண்ணிக்கையில் உள்ளன. வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பாதுகாப்பு பணியில் இருக்கும்போது வீரமரணம் அடையும் வீரர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து வீரர்களுக்கும் இழப்பீட்டு தொகையானது ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
நடப்பு 2022ம் ஆண்டில் இதுவரை, சி.ஆர்.பி.எப். வீரர்களில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுடைய மனஅழுத்தம் குறைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அவர்களது குறைகளை பகிர்ந்து கொள்ள கூறி, அதற்கு தீர்வு காண முயற்சிக்கிறோம். அது முடியாதபட்சத்தில், தொழில்முறை அதிகாரிகளிடம் அவற்றை கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளார்.